தடையில்ல உங்கள் இருசக்கர வாகன பயணத்துக்கு உதவும் சர்வீஸ் செயலி!

தடையில்ல உங்கள் இருசக்கர வாகன பயணத்துக்கு உதவும் சர்வீஸ் செயலி!

சென்னையில் பிறந்து வளர்ந்த சுஜித் சங்கர், பிபிஏ முடித்தவர். தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியைத் துவங்கி கட்டுமானம் மற்றும் வணிகத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அப்போது, தன் சொந்த கேரேஜில் தனது பைக் மற்றும் நண்பரின் வாகனத்தை தானே பழுதுபார்த்த பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்தார். ஆர்வம் காரணமாக இவ்வாறு துவங்கப்பட்ட பழக்கம், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழில்நுட்ப ஊழியரான சுஜித்தை அதையே தொழிலாக நடத்த முடிவெடுக்க வைத்தது. அதில் அவரது நண்பரையும் தன்னுடன் இணைத்துக் கொண்டார்.

”நாங்கள் கட்டும் ஒவ்வொரு வீட்டிற்கும், அவர்களுக்கான ஒரு பிரத்யேக கேரேஜ் இருப்பதை உறுதிசெய்தோம். அதுவே எங்களின் முதல் அடி,” என்றார் சுஜித்.

MOTOMECHA பிரத்யேக சேவை

’மோட்டோமெக்கா’ (MOTOMECHA) ஒரு ஆன்லைன் தளம். பைக் சர்வீஸ் மற்றும் பராமரிப்பை மொபைல் செயலி மூலமாக புக் செய்ய வசதியளிக்கும் சேவை. பயனாளிகள் வாகனத்தின் விவரங்களை மொபைல் செயலியில் பதிவு செய்து சேவை மற்றும் பராமரிப்பு பணிகளை இருக்கும் இடத்திலிருந்து கொண்டே புக் செய்துகொள்ளலாம். Motomecha, சேவை உதவியுடன் வாகன ஆய்வையும் 24/7 மணி நேரமும் வழங்குகிறது.

பிரத்யேகமாக அங்கீகரிக்கப்பட்ட கேராஜ் மட்டுமல்லாமல் 170 கேராஜ் சேவை நிறுவனங்களுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் 450க்கும் மேற்பட்ட மொபைல் செயலி சேவை புக்கிங்கை பெற்று, சேவையளித்து வருகிறது Motomecha.

”வாடிக்கையாளர்கள் எங்களுக்கு அளித்து வரும் ஆதரவு எங்களுக்கு அதிக உற்சாகத்தை அளிக்கிறது. Motomecha தமிழ்நாட்டின் முழுமையான வசதிகள் கொண்ட கேராஜுடன் கூடிய முதல் சேவை பராமரிப்பு போர்டல். தனியார் கேராஜ்களை இணைப்பதற்கு முன், அவர்களின் பின்புலம் முறையாக சரிபார்த்த பின்பே Motomecha-தளத்துடன் இணக்கப்படுகிறது,” என்றார் சுஜித்.

Motomecha, இரு சக்கர வாகனங்களுக்கு சேவையளிக்கும் அருகாமையிலுள்ள மையங்களை பட்டியலிடும் போர்டல் மட்டுமல்ல, இரு சக்கர வாகனங்களுக்கான பல தீர்வுகளை வழங்கும் இடமாகவும் செயல்படுகிறது. வாகனங்களுக்கு சேவையளித்த பின்பும் 60 நாட்கள் சேவை உத்திரவாதம் வழங்கும் ஒரே நிறுவனம் Motomecha என்கிறார் அதன் நிறுவனர்.

மேலும் இவர்கள் அதிவேக சேவை ஒன்றையும் அளிக்கின்றனர். 2015-ம் ஆண்டின் வெள்ளத்தின்போது 926 வாகனங்களுக்கு சேவையளித்துள்ளனர். விற்பனையாளர்களுடன் இணைந்து சிறப்பான உதிரிப்பாகங்கள் வழங்கும் முறையை பின்பற்றி வரும் இவர்களுக்கு, பாரத் பெட்ரோலியம் 2015-ன் சிறந்த கேராஜ் விருதை வழங்கி பாராட்டியுள்ளது.

முதலீடு, வருவாய் மற்றும் சேவை கட்டணம்

சுஜித் தனது வருவாயைக் கொண்டு குறைந்தபட்ச முதலீடாக 10 லட்சத்தில் ஒரு கேராஜை உருவாக்கினார். பின்னர் மெல்ல மெல்ல சென்னையில் பல இடங்களில் விரிவு செய்து, தற்போது சென்னை தவிர, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், திண்டுக்கல் என ஏழு நகரங்களில் செயல்பட்டு வருகிறது.

Motomecha கடந்த வருடம் 80 லட்ச ரூபாய் வருவாயை ஈட்டியது. நடப்பாண்டு வருவாயாக 1.80 கோடி ரூபாயையும், 2017 இறுதியில் 4 கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களின் நிலையான சேவை கட்டணம் 499 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.

சந்தித்த சவால்கள்

போட்டிகள் நிறைந்த சந்தையில், Motomecha ஆன்லைன் போர்டலை ஊக்குவிக்க முதலில் அதிகம் சிரமப்பட்டார்கள்.

”முழு கட்டமைப்பை எங்களின் கேராஜில் கொண்டிருப்பது எங்களின் சிறப்பு. மேலும் ஆங்காங்கே பல கேராஜ் சேவை மையங்களை எங்கள் தளத்துடன் இணைத்து இயங்குவது எங்களின் வெற்றிக்கு காரணம். அதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவதை முதன்மையாக கொண்டு நாங்கள் இயங்குவதால் அவர்களிடையே எங்களுக்கு சிறந்த வரவேற்பு கிடைத்தது.” 

ஏதேனும் எதிர்மறை கருத்துக்களை வாடிக்கையாளர்கள் தெரிவித்தால் அதற்கான தீர்வுகள் உடனடியாக கண்டு, அவர்களுக்கு எங்கள் மேலுள்ள நம்பிக்கையை திரும்பப்பெறுகிறோம். இதுவே எங்களது வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும் சுஜித் கூறுகிறார்.

செயலி வாயிலாக மாத மாதம் புக்கிங் அதிகரித்து வருகிறது. மேலும் அதிகமான சொந்தமான அல்லது ஷேர் கேராஜ்களை இணைக்க திட்டமிட்டு வருகின்றனர். சுஜித், ப்ரகாஷ், தனிஷ் ஆகியோர் அடங்கிய பிரதான குழுவே இந்த சந்தையில் நுழைவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளனர். பாலா, அஸ்ரா, காயத்ரி ஆகியோர் பின்னணியில் இருந்து குழுவாக செயல்பட்டு உதவி வருகின்றனர்.

தொழில்நுட்ப துறையில் அனுபவம் கொண்டவர் என்பதால் வலைதளம் மற்றும் மொபைல் செயலிகளை சுஜித் தாமாகவே உருவாக்கிக்கொண்டார். அத்துடன் மார்கெட்டிங் மற்றும் விளம்பரங்களுக்கு சமூக ஊடகங்களை முழுமையாக பயன்படுத்திக்கொண்டார்.

Motomecha தமிழகமெங்கும் செயல்பட விரிவாக்கப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்காக சமீபத்தில் பிற மிகப்பெரிய அக்ரிகேட்டர் மாடல்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆட்டோமொபைல் துறைக்கு புதிதாக வருபவர்களை ஆதரித்தும் வழிகாட்டியும் வருகிறது Motomecha.

செயலி்யை பதிவிறக்கம் செய்ய : Motomecha

4

Leave a reply